Monday, January 10, 2011

சென்னை புத்தக் கண்காட்சி - 2

இத்தனை கடைகளையும், பதிப்பங்களையும் பார்த்து கொஞ்சம் பிரமிப்பாக இருந்தாலும்  உட்காருவதற்கு கண்காட்சியில் இடமில்லை. ஆனால் நம் மக்கள் கட்டுச்சாதம் கட்டிவந்து கீழே உட்காந்து பட்டையை கிளப்பி கொண்டிருந்தார்கள்.

உடுமலை.காம்  போல  தமிழ் புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய மற்றொரு  பிரத்தேயக இணையதளம், நன்னூல் . இந்த புத்தக் கண்காட்சியில்தான் புதுமனை புகுவிழா பண்ணியுள்ளார்கள்.

ஒரு பதிப்பகத்தில் அவர்களுடைய favourite எழுத்தாளர்கள் படம் வைத்திருந்தார்கள். இந்த எழுத்தாளர் அம்மாவை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.   அட நம்ம துளசி கோபால். பிரபல பதிவர்!!  'நியூசிலாந்து', 'என் செல்ல செல்வங்கள்' இரண்டு புத்தகங்களை எடுத்து காண்பித்தார்கள். முன்னுரை மட்டும் படித்துவிட்டு கிளம்பினேன்.



காலச்சுவடு பதிப்பகத்தில்  கண்ணன் இருந்தார். தமிழ்நதியின்  “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்" வாங்கலாம் என்று  கொஞ்ச நேரம் புத்தகத்தை புரட்டினேன்.  ஏற்கனவே அவருடைய இணையதளத்தில் வந்த செறிவான மனதை பாதித்த கட்டுரைகள். ஏற்கனவே படித்ததுதான் என்பதால் வாங்கவில்லை.  காலச்சுவடு பதிப்பகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஙால்களில் ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம், புக் கிளப், சுராவின் ஐந்தாம் ஆண்டு நினைவையொட்டி அவருடைய மூன்று நாவல்கள் 500ரூபாய் இப்படி சிறப்புச் சலுகைகள் இருந்தது.

உயிர்மையில் எழுத்தாளர்கள் வாரியாக அடுக்கி வைத்தது புத்தகங்களை கண்டுபிடிப்பதற்கு எளிதாக இருந்தது. சுஜாதா, சாரு, எஸ்ரா...இந்த வரிசையில் கூட்டம் இருந்தது. ஒரு பெண்மணி தன்னுடைய தோழனுடனோ, தோழியுடனோ அலைபேசியில், '"தேகம்"  கட்டுரை இல்லையாம். நாவலாம். வாங்கட்டா...அப்புறம் சுஜாதா எழுதினதில நல்லதா ஒண்ணு சொல்லு...' னு அங்க இருக்கிற புத்தகங்களை படித்து பட்டியலிட்டு கொண்டிருந்தார். சாருவும், ஷாஜியும் இப்பதான் போனர்கள் என்று அங்கிருந்தவர் சொன்னார்.  எஸ்ராவின் துயிலா  சாருவின் தேகமா ? என்ற யோசனையுடன், மனுஷ்ய புத்திரனின் 'இதற்கு முன்பும், இதற்கு பிறகும்' புத்தகத்தை  வாங்கிக் கொண்டு அவரிடம் ஒரு ஹலோ சொல்லிவிட்டு புத்தகத்தில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். உயிர்மை வருடச்சந்தா  சிறப்பு சலுகையாக 150ரூபாய்!  அதில் பதிவு செய்து கொண்டு  ஞானியோட பதிப்பகம் எங்கே என்று கண்டுபிடித்து போனால் ஞானி அங்கிருந்தார்.

ஓ பக்கங்கள், அறிந்ததும் அறியாததும், நம் வாழ்க்கை நம் கையில், மற்றும் அவர் எழுதிய சில நாடகங்கள், அவருடைய ஒரே நாவல், தவிப்பு...இப்படி மிகச் சில புத்தகங்களே !

ஸ்பெக்ட்ரம் ஊழலில் யாருக்கு அதிக லாபம்? 1) திமுக, ராசா, கனிமொழி 2) திமுக, ராசா, கனிமொழி மற்றும் காங்கிரஸ். 3) ஊழலே நடக்கவில்லை.

இப்படி ஒரு சின்ன ஓட்டெடுப்பு வைத்திருந்தார்கள். 'கள்ள ஓட்டு போடலாமா, சார்'னு கேக்க, 'எல்லா கேள்வியும்  நல்ல கேள்விதான். இங்க வர்றவுங்க கள்ள ஓட்டெல்லாம் போடமாட்டாங்க...'  சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிட்டு ஓட்டையும் குத்திட்டு அடுத்த  எங்க போலாம்னு யோசிக்க .... பாராவை பார்த்தா  அவர்கிட்டேயும்  ஆட்டோகிராப் வாங்கலாம்னா அவர் கேண்டீனுக்கோ இல்ல பால்கோவா கடையிலயோ இருப்பாருனு தேடிட்டு கேண்டீன் பக்கம் போனேன்.

ஒரு நல்ல காபி மட்டுமே
கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய
எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்க்கக்கூடியது
என்று நினைத்தபடியே
மீண்டும் ஒருமுறை
தனது பணிநீக்க உத்தரவைப்
படிக்கத் தொடங்குகிறாள்
   - மனுஷ்ய புத்திரன் (இதற்கு முன்பும் இதற்கு பிறகும்)

@ (நாளை)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails